மலேசிய தேசியப் பல்கலைக்கழகமான யுகேஎம்மில் நலன் முரண்பாடு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார், முந்தைய நிர்வாகத்தால் கிட்டத்தட்ட எட்டு மாதங்களாகப் புறக்கணிக்கப்பட்டதாகப் பொதுக் கணக்காய்வுக் குழுவான பிஏசி அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரில், யுகேஎம்ஷேப் மையத்தைச் சேர்ந்த நான்கு பணியாளர்கள் மற்றும் முன்னாள் இயக்குநருடன் தொடர்புடைய ஐந்து பேர் குறித்து நலன் முரண்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக பிஏசி தலைவர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சூடின் தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழகத்தின் உள்விசாரணைக் குழுவின் சுதந்திரத்தையும் அவர் கேள்விக்குட்படுத்தினார். ஆரம்பக்கட்ட விசாரணையில் கீழ்நிலை அதிகாரிகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும், முக்கிய முடிவுகளை எடுத்த மூத்த அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இத்தகைய முறைகேடுகளை விசாரிக்க, சுயேட்சை விசாரணைக் குழுக்களைத் துணைவேந்தருக்குப் பதிலாகப் பல்கலைக்கழக இயக்குநர் வாரியம் அல்லது உயர்கல்வி அமைச்சு நியமிக்க வேண்டும் என்றும் பிஏசி பரிந்துரைத்துள்ளது.








