கூலிம் அருகே ஜாலான் கேஎச்டிபி 1 சாலையில் நேற்று இரவு டெஸ்லா கார் மோதியதில் புரோட்டோன் சாகா FL காரை ஓட்டிச் சென்ற 39 வயதான நூர் லேலா ஸைனோன் என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இரவு 11.45 மணியளவில் நடந்த இந்த விபத்தில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
லெபோ பெர்டானா பகுதியிலிருந்து நாகா லிலிட் நோக்கிச் சென்ற 29 வயது ஆடவர் ஓட்டிய டெஸ்லா காரானது, போக்குவரத்து சிவப்பு விளக்கில் நிற்காமல் சென்று, பெண் செலுத்திய காரின் வலதுபுறத்தில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், டெஸ்லா ஓட்டுநர் மது போதையில் வாகனம் ஓட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாம்சுல் சின்ரிங் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








