முறையான பயண ஆவணங்களின்றி 38 வயதுடைய வெளிநாட்டுப் பெண் ஒருவரை நாட்டிற்குள் அனுமதித்ததாக, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரைக் கைது செய்யக் காரணமாக இருந்த இந்தியப் பெண் அதிகாரிக்கு ஏகேபிஎஸ் தமது பாராட்டுகளையும், ஆதரவையும் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 17-ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 2-இல் உள்ள குடிநுழைவுச் சோதனை மையத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது தனது மேலதிகாரி, நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு மாறாகச் செயல்படுவதைக் கவனித்த அந்த பெண் ஏகேபிஎஸ் அதிகாரி, அளித்த தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் ஸையின் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முறைகேட்டைத் துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்த இந்தியப் பெண் அதிகாரியின் நேர்மையைப் பாராட்டிய அவர், அவருக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அதிகாரி மீது 2007-ஆம் ஆண்டின் ஆள் கடத்தல் மற்றும் புலம்பெயர்வோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 26B(d)-இன் கீழ் விசாரணை நடைபெற்று வருகின்றது.








