முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு தொடர்பான இரகசிய ஆவணங்களை, அரசாங்கம் பொதுமக்களிடம் வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியத்தின் ரகசியக் கூட்டக் குறிப்புகளை அரசாங்கமோ அல்லது நீதிமன்றமோ, சட்டத்துறைத் தலைமை அலுவலகமோ பொதுமக்களிடம் வெளியிடவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று, பாஸ் கட்சியின் பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் ஃபட்லி ஷாரி, இரகசிய ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் அன்வார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தொடர்ந்து, சட்டத்துறைத் தலைமை வழக்கறிஞர் அந்த ஆவணத்தின் ரகசியத் தன்மையை நீக்க நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கூட்டக் குறிப்புகளை அல்ல, மன்னிப்பு தொடர்பான முடிவை மட்டுமே வெளியிடக் கோரியதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், ஆவணத்தை வெளியிட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அரசாங்கமே அந்த ஆவணத்தை வெளியிட்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது என்றும் அன்வார் வலியுறுத்தினார்.








