Oct 23, 2026
Thisaigal NewsYouTube

இசிஆர்எல் கேபிள்கள் கொள்ளை: 4 பேர் மீது ஆயுதக் கொள்ளைக் குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இசிஆர்எல் கேபிள்கள் கொள்ளை: 4 பேர் மீது ஆயுதக் கொள்ளைக் குற்றச்சாட்டு

கிழக்குகரையோர மாநிலங்களுக்கான ரயில் இணைப்புத் திட்டமான இசிஆர்எல்லின் கேபிள்களைக் கொள்ளையடித்ததாக நான்கு ஆடவர்கள், தெமர்லோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

22 வயதுடைய எஸ். ரவீந்திரன், 21 வயதுடைய ஆ. சூரிய பிரகாஷ், 22 வயதுடைய எம். தேனிஷ், 34 வயதுடைய எல். ரமேஸ் ஆகிய நால்வரும், கடந்த அக்டோபர் 9ஆம் தேதி பகாங், தெமர்லோ, ஸ்ரீ துவாலாங் பகுதியில் உள்ள இசிஆர்எல் திட்டக் கிடங்கில், சுமார் 10,000 ரிங்கிட் மதிப்பிலான கேபிள்கள் மற்றும் அவற்றைத் தாங்கும் கட்டமைப்புகளைத் துருப்பிடித்த பராங்கைக் காட்டி ஆயுதக் கும்பலாகக் கொள்ளையடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஹ்மாட் ரிஸ்கி அப்துல் ஜாலில் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது நால்வரும் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்.

குற்றவியல் சட்டத்தின் 395 மற்றும் 397ஆவது பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

ஒவ்வொருவருக்கும் தலா 15,000 ரிங்கிட் பிணை வழங்கிய நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க வரும் டிசம்பர் 3ஆம் தேதியை நிர்ணயித்தது. இசிஆர்எல் மற்றும் டெலிகாம் மலேசியா கேபிள் கொள்ளைகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு கும்பல்கள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட 17 பேரில் இந்த நால்வரும் அடங்குவர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →