நேபாள நிலச்சரிவில் மாயமான மலேசியர்களின் குடும்பங்களுக்குக் கடன் திருப்பிச் செலுத்தும் தவணைகளை ஒத்திவைப்பது உள்ளிட்ட நிதிச் சலுகைகளை வங்கிகள் வழங்கியுள்ளன.
மலேசிய வங்கிகள் சங்கமான ஏபிஎம் (ABM), அக்டோபர் தொடக்கத்தில் இந்த உதவிகளை அறிமுகப்படுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்துள்ளது.
கடன் சலுகைகளுக்கு விண்ணப்பிப்பது, ஆவணங்களைத் தயாரிப்பது உள்ளிட்ட நடைமுறைகளில் குடும்பங்களுக்கு வழிகாட்டுவதற்குத் தொடர்பு அதிகாரிகளையும் வங்கிகள் நியமித்துள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க, மலேசிய தேசிய வங்கியுடனும் தொடர்புடைய தரப்புகளுடனும் தொடர்ந்து இணைந்து செயல்படுவதாகவும் ஏபிஎம் தெரிவித்துள்ளது.








