சரவாக் மாநிலம் கூச்சிங்கிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இதுவரை 24 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து சரவாக் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டைஃபுலிஸான் இஷாக் கூறுகையில், பாதிக்கப்பட்ட ஆசிரியர், புகார்தாரர், மருத்துவ அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 வயது மாணவரின் பெற்றோர் மற்றும் குடும்ப ஓட்டுநரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட மாணவரைக் கைது செய்துள்ள போலீசார், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களைக் கைப்பற்றி மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.








