லாவோஸில் தனியார் விமானத்தில் கடத்த முயன்ற 521 கிலோ ஷாபு போதைப்பொருள் தொடர்பாக, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.
மலேசிய போலீசாருக்கும், பிலிப்பைன்ஸ் போதைப்பொருள் தடுப்பு அமைப்புக்கும் இடையே கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மலேசியாவின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பிலிப்பைன்ஸ் அமைப்பின் தலைமை இயக்குநர் இசாகானி ஆர். நேரேஸானி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும், இக்கடத்தலில் பிலிப்பைன்ஸ் அரசியல் தலைவர் ஒருவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்த உளவுத் தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி லுவாங் பிரபாங் அனைத்துலக விமான நிலையத்தில், மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முயற்சி அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைத் தகவல்களை இரு நாடுகளின் அதிகாரிகளும் பரிமாறிக் கொண்டு தற்போது மேல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








