பகாங், ரவூப், டோங் பகுதியில் சாலையோரம் அதிக சத்தத்தில் இசை ஒலிக்கவிட்டதைத் தட்டிக் கேட்ட போலீஸ்காரரைத் தாக்கியதாக மியன்மார் நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
26 மற்றும் 30 வயதுடைய அந்த இருவரும் தோட்டத் தொழிலாளர்கள். அதிகாலை 2.45 மணியளவில் டோங், கம்போங் பாமா கூலாட் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது.
கிராம மக்கள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸ்காரரை, இருவரும் மது போதையில் தாக்கியதாக பகாங் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் போலீஸ்காரரின் தலை மற்றும் உடலில் வீக்கம் ஏற்பட்டதால், ராவூப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் எந்த ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை.
இவ்வழக்கு குற்றவியல் சட்டம் 353ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.








