ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.15-
சுற்றுப் பயணிகளை ஏற்றிக் கொண்டு, மலேசியாவில் இ-ஹெய்லிங் சேவையை வழங்கி வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த நான்கு வாகனங்களைச் சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே பறிமுதல் செய்துள்ளது.
சிங்கப்பூரின் அந்த நான்கு வாகனங்களைச் சோதனையிட்ட போது, அவை இ-ஹெய்லிங் சேவையை மேற்கொள்வதற்கான பதிவைக் கொண்டிருக்காதது தெரிய வந்தது. அத்துடன் மலேசியாவில் பொது போக்குவரத்துச் சேவையை மேற்கொள்வதற்கான லைசென்ஸையும் அவை கொண்டிருக்கவில்லை என்பது சோதனையில் தெரிய வந்ததாக ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.
செல்லத்தக்க லைசென்ஸின்றி வெளிநாட்டு வாகனங்கள் மலேசியாவிற்குள் பொது போக்குவரத்துச் சேவையை வழங்குவதாகக் கிடைக்கப் பெற்றப் புகாரைத் தொடர்ந்து ஜேபிஜே மேற்கொண்ட உளவுத் தகவலின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ ஏடி ஃபட்லி குறிப்பிட்டார்.
சுற்றுப் பயணிகளுக்கு பொது போக்குவரத்துச் சேவைக்குப் பயன்படுத்தப்பட்ட சிங்கப்பூரியர்களுக்குச் சொந்தமான டொயோட்டா அல்ஃபார்ட், வேல்ஃபையர், ஹொண்டா ஸ்பாடா மற்றும் டொயோட்டா ஹியாஸ் ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.








