கோலாலம்பூர், டிசம்பர்.10-
மலேசிய ரயில் போக்குவரத்துச் சேவையில் மற்றொரு மைல்கல்லாக அமையவிருக்கும் கோலாலம்பூர் சென்ட்ரலையும், ஜோகூர் பாரு சென்ட்ரலையும் இணைக்கும் ETS மின்சார ரயில் சேவை வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
இதன் தொடக்க விழா, நாளை டிசம்பர் 11 ஆம் தேதி ஜோகூர் பாருவில் நடைபெறவிருக்கிறது. மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இச்சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவிருக்கிறார்.
கோலாலம்பூருக்கும், ஜோகூருக்கும் இடையிலான ETS ரயில் சேவைக்கான கட்டணம் 82 ரிங்கிட்டிலிருந்து தொடங்கவிருக்கிறது. இதன் தொடக்க விழாவை முன்னிட்டு டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி வரை சுமார் ஒரு மாத காலத்திற்கு பயணச் சேவைகளுக்கு 30 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்கப்படுவதாக மலாயன் ரயில்வே பெர்ஹாட் அறிவித்துள்ளது.
கோலாலம்பூருக்கும், ஜோகூர்பாருவிற்கும் இடையில் நாள் ஒன்றுக்கு 4 ETS ரயில் சேவைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.








