பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் சக மாணவியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவனை ஷா ஆலம் உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, சட்டத்துறை தலைவர் அலுவலகமான ஏஜிசி மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, கடந்த செவ்வாய்க்கிழமை அப்பீல் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டதாக ஏஜிசி தெரிவித்துள்ளது.
குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்த அச்சிறுவன், சம்பவம் நடந்தபோது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறி, வழக்கின் இறுதியில் உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
எனினும், நீதிபதி அட்லின் அப்துல் மாஜிட், சிகிச்சைக்காக பேராவில் உள்ள பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையில் சிலாங்கூர் சுல்தானின் உத்தரவுப்படி தடுத்து வைக்க உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி காலை 9.20 முதல் 9.35 மணிக்குள் பள்ளியின் பெண்கள் கழிவறையில் 16 வயது மாணவி யாப் ஷிங் ஸுவேனைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஏஜிசி மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஷிங் ஸுவேனின் தாயார் வோங் லீ பிங் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேவேளையில், வழக்கை முன்கூட்டியே தீர்மானிக்குமாறு குடும்பத்தினர் கேட்கவில்லை என்றும், உரிய சட்ட நடைமுறை தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பஹாகியா மருத்துவமனையில் மனநல மதிப்பீட்டை முடித்த பின்னர், கடந்த ஜனவரி மாதம் அச்சிறுவன் வழக்கை எதிர்கொள்ள தகுதியானவர் என அறிவிக்கப்பட்டிருந்தார்.
அதன் படி, கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொலை வழக்கின் விசாரணை தொடங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர் சிறார் என்பதால், விசாரணை ரகசியமாக நடத்தப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி அவர் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








