பொது இடத்தில் பெண் ஒருவரை மிரட்டியது மற்றும் போலீஸ்காரர் ஒருவரை ஏளனப்படுத்தியது தொடர்பில் அரச மலேசியப் போலீஸ் படையை சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார் மீது மூன்று குற்றச்சாட்டுகள் இன்று சுமத்தப்பட்டுள்ளன.
செலாயாங்கில் உள்ள இரு வெவ்வேறு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்ட 35 வயதான ஷீலா தனக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
அரச மலேசிய போலீஸ் படையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஷீலா, தமது வழக்கறிஞர் மனோகரன் மலையாளத்துடன் மிகுந்த உற்சாகத்துடன் நீதின்றத்திற்கு வந்திருந்தார்.
அண்மையில் இரு வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளினால் மக்களின் பெரும் கோபத்திற்கு ஆளானதாக கூறப்படும் பெட்டலிங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஷீலா, கடந்த ஜுன் 15 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் கோம்பாக், தாமான் ஸ்ரீ கோம்பாக், ஜாலான் எஸ்ஜி 1/1 இல் உள்ள ஓர் அங்காடி கடை வளாகத்தில் ஸ்டால் உரிமையாளரான 69 வயது இந்தியப் பெண்ணை மிரட்டியது மற்றும் அவரை அடிக்க சென்றது தொடர்பில் குற்றவியல் சட்டம் 509 பிரிவின் கீழ் இன்ஸ்பெக்டர் ஷீலா குற்றஞ்சாட்டப்பட்டார்.
இக்குற்றச்சாட்டை மறுத்து மறுத்து ஷீலா விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் மூவாயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் சாய் குவான் ஹோக் அனுமதி அளித்தார்.
அதே தினத்தன்று அதே இடத்தில் கடமையில் ஈடுபட்டு இருந்த லான்ஸ் கோப்ரல் அப்துல் அரிஃப் ஃபர்ஹான் அப்துல் ரசாக் என்பவரின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் வகையில் அவரை ஏளனப்படுத்தியது மற்றும் திட்டியது தொடர்பில் மாஜிஸ்திரேட் நூர் ஹஃபிஸா ரஜுனி முன்னிலையில் ஷீலா மீது மேலும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவ்விரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து இன்ஸ்பெக்டர் ஷீலா விசாரணை கோரினார்.
முன்னதான, இன்ஸ்பெக்டர் ஷீாவிற்கு எதிராக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் பரிந்துரை செய்த கூடுதல் ஜாமீன் தொகையை குறைக்கும்படி ஷீலாவின் வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் மலாயில் மொழியியல் துறை பட்டதாரியான இன்ஸ்பெக்டர் ஷீலா, கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து அரச மலேசியப் படையில் பணியாற்றி வருவதாக மனோகரன் குறிப்பிட்டார்.
ஷீலாவின் தந்தை சுமார் 39 ஆண்டு காலம் அரச மலேசிய போலீஸ் படையில் உதவி சுப்பரிதெண்டனாக பணியாற்றியவர். அவரின் இளைய சகோதரர் இன்னமும் போலீஸ் படையில் பணியாற்றி வருவதாக மனோகரன் மலையாளம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


