கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
கடந்த இரண்டு ஆண்டுகளில் எஸ்பிஎம் தேர்வில் 10ஏ அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.
இதில் 2024 - 2025 கல்வி ஆண்டில் எஸ்பிஎம் தேர்வுகளில் 10ஏ மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற மொத்தம் 4,932 மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
2025 - 2026 கல்வி ஆண்டில் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் 6,029 மாணவர்களுக்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஃபாட்லீனா சீடேக் விளக்கினார்.
மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் சேருவது என்பது தகுதியின் அடிப்படையில் அமைந்துள்ளது. 90 விழுக்காட்டு மாணவர்கள் கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டும், மீதமுள்ள 10 விழுக்காட்டு மாணவர்கள், அவர்களின் குடும்ப வருமானம், பின்னணி மற்றும் இன ரீதியான ஒதுக்கீட்டு அடிப்படையில் அவர்கள் புறப்பாட நடவடிக்கைகளில் கொண்டுள்ள திறன் ரீதியாகவும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 60 விழுக்காடு இடங்களும், எஞ்சிய 40 விழுக்காடு இடங்கள் நடுத்தர மற்றும் உயர் வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக இன்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதிலில் ஃபாட்லீனா சீடேக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வித் தகுதியில் ஏ மதிப்பெண்களின் எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மாணவர்களின் பிரிவில் உள்ள நான்கு முக்கியப் பாடங்களின் தகுதிப் புள்ளிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று அவர் விளக்கினார்.
எஸ்பிஎம் தேர்வுகளில் 10ஏ மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குத் தானாகவே மெட்ரிகுலேஷன் இட வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி அமைச்சரவை முடிவு செய்து இருப்பதையும் ஃபாட்லீனா சீடேக் சுட்டிக் காட்டினார்.
2015 முதல் 2025 ஆம் ஆண்டு வரை மெட்ரிகுலேஷன் கல்லூரிகளின் இட வாய்ப்புகள் வழங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறித்து பக்காத்தான் ஹராப்பான் லாபிஸ் எம்.பி. பாங் ஹோக் லியோங் எழுப்பிய கேள்விக்கு கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.








