ஷா ஆலாம், ஆகஸ்ட்.05-
சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்த முற்பட்ட இரண்டு சகோதரர்கள், போலீஸ் சோதனையிலிருந்து தப்பிய நிலையில், அவர்கள் சுமார் 90 கிலோமீட்டர் தூரம் வரை விரட்டிச் செல்லப்பட்டு பிடிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஷா ஆலாம், செக்ஷன் 7, பூசாட் கமார்ஷெல் பகுதியில் நிகழ்ந்தது. அந்த சகோதரர்கள் பயன்படுத்திய நீல நிற புரோட்டோன் வீரா காரை 6 எம்பிவி போலீஸ் ரோந்துக் கார்கள் விரட்டிச் செல்லும் 17 வினாடிக் காணொளி ஒன்று , தற்போது சமூக வலைத்தளங்களில் வரைலாகியுள்ளது.
அந்த சகோதரர்களின் காரை தடுத்து நிறுத்த போலீசார் முற்பட்ட வேளையில் போலீசாரின் சைரன் விளக்கு மற்றும் ஒலிப்பெருக்கின் வழி விடுத்த எச்சரிக்கையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தப்பினர். இதன் காரணமாகவே 6 ரோந்து போலீஸ் கார்கள், அவர்களைத் துரத்திச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
செக்ஷன் 9 இல், சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் முன்புறம் வளைத்துப் பிடிக்கப்பட்ட 18 மற்றும் 24 வயதுடைய இரு சகோதர்களின் கார் சோதனையிடப்பட்டது. காரின் இருக்கைக்கு அடியில் கெத்தும் நீர் என்று நம்பப்படும் ஒரு திரவப் பொருளை மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஏசிபி முகமட் இக்பால் விளக்கினார்.








