பேரா, ஜெலாப்பாங்கில் 54 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் கார்செம் (Carsem) தொழில்நுட்ப நிறுவனம், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கூடுதல் பணியாளர்களைத் தேடி வருவதாகவும், அதிகமான இந்திய இளைஞர்கள் தமது நிறுவனத்தில் இணைய வேண்டும் என்றும் அதன் தலைமை நிர்வாகி பேராசிரியர் டி.எஸ் டாக்டர் அஜயந்திரன் ஆறுமுகம் அழைப்பு விடுத்துள்ளார்.
எச்ஆர்டி விருதளிப்பு விழாவில் தங்க விருதைப் பெற்றவரான டாக்டர் அஜயந்திரன் ஆறுமுகம், இந்த தங்க விருதை தாங்கள் பெற்றிருப்பது மிகுந்த பெருமையளிப்பதாக குறிப்பிட்டார்.
மனித மூலதன மேம்பாட்டில் சிறந்து விளங்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட முதலாளிகள், புதுமையான பயிற்சி வழங்குநர்கள் மற்றும் சிறந்த பயிற்றுநர்களைக் கௌரவிக்கும் வகையில், மனிதவள அமைச்சின் கெசுமா ஆதரவுடன் எச்ஆர்டி கார்ப் ஏற்பாட்டில் 25ஆவது ஆண்டாக எச்ஆர்டி விருதுகள் 2026 விழா நேற்று கோலாலம்பூர், பங்சார் சௌத் பகுதியில் உள்ள கனேக்ஷன் கான்ஃபரன்ஸ் & இவண்ட் செண்டரில் சிறப்பாக நடைபெற்றது.
மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மனிதவள அமைச்சர் விருதான பிளாட்டினம், எச்ஆர்டி கார்ப் விருதுகளான தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என நான்கு பிரிவுகளின் கீழ் மொத்தம் 53 சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
விருதைப் பெற்ற கார்செம் (எம்) செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் சார்பில் பேசிய பேராசிரியர் டாக்டர் அஜயந்திரன் ஆறுமுகம், பேராக்கில் தமது நிறுவனம் சுமார் 3,000 பணியாளர்களைக் கொண்டுள்ளதாகவும், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மேலும் பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, தகுதியுள்ள இந்திய இளைஞர்கள் தமது நிறுவனத்தில் இணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
எதிர்காலத் திறன் மேம்பாட்டுப் பிரிவில் சில்வர் எனும் வெள்ளி விருதைப் பெற்ற கெடா, கூலிம், ஹை டெக் பார்க்- டெலெஃபிளக்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் முனீஸ்வரன் காந்தி கூறுகையில், எதிர்காலத் தலைமுறைக்குத் தேவையான திறன்மிக்க பணியாளர்களை உருவாக்குவதில் தமது நிறுவனம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது என்றார். இந்த விருது அத்தகைய முயற்சிகளை மேலும் ஊக்குவிப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
பயிற்றுநர் பிரிவில் விருதைப் பெற்ற பினாங்கு, குளுகோர், பவர் சொலுஷன்ஸ் திரேனிங் மேனஞ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கருணா மூர்த்தி, கூறுகையில் 30 ஆண்டுகாலப் பயிற்சித் துறை அனுபவத்திற்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தில் தமது பணியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் வாடிக்கையாளர்களின் பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
மனித மூலதன மேம்பாட்டில் நிறுவனங்கள், பயிற்சி வழங்குநர்கள், பயிற்றுநர்கள் மற்றும் தொழில்துறைப் பங்குதாரர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான எச்ஆர்டி விருதுகள், மலேசியாவின் எதிர்காலத் தொழிலாளர் சக்தியை உருவாக்குவதற்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் தளமாக அமைந்துள்ளன.








