ராணுவ விமானப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் வழக்கில், மலேசிய அரச விமானப்படையான டியுடிஎம்மைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் உட்பட ஆறு பேர் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்.
ஆறு பேரும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளனர் என்று புக்கிட் அமானின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
இவ்வழக்கில் இதுவரை ஏழு டியுடிஎம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், ஆறு பொதுமக்கள் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் எஞ்சிய ஏழு பேர் சிறப்புத் தடுப்பு நடவடிக்கைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எதிர்கொள்வர்.
சுபாங் விமானப்படைத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனையின்போது போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸ் நடத்திய நடவடிக்கைகளில் 96.64 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதன் மதிப்பு சுமார் 4.83 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.








