கேஎல்எஸ்சிஏஎச் எனப்படும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன மண்டபத்தின் 99 ஆண்டுகால நிலக் குத்தகைப் புதுப்பிப்பு விவகாரத்தில், தாங்கள் எவ்விதத் தவறும் செய்யவில்லை என்றும், மறைப்பதற்கு எதுவுமில்லை என்றும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோவின் அரசியல் செயலாளர் யாப் யீ வோன் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக இன்று புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் ஐந்து மணி நேரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் கூறினார்.
மேலும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே 99 ஆண்டுகாலக் குத்தகை வெறும் ஆயிரம் ரிங்கிட் நிலக் கட்டணத்தில் புதுப்பிக்கப்பட்டதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் வகையில், எஸ்பிஆர்எம் சட்டம் 2009 ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடைபெறுவதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்துள்ளார்.








