இந்தியப் பயணிகளின் வருகை மற்றும் சுற்றுலாத்துறையின் வருவாயைப் பாதுகாக்கும் வகையில், இந்தியக் குடிமக்களுக்கான விசா இல்லா நுழைவு வசதியை 2027ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என மலேசிய ஹோட்டல் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய விசா விலக்கு சலுகை 2026 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், 2027 ஜனவரி முதல் மீண்டும் விசா நடைமுறையை அமல்படுத்தினால், இந்தியப் பயணிகள் எளிதான நுழைவு வசதிகளைக் கொண்ட பிற நாடுகளைத் தேர்ந்தெடுக்கக்கூடும் என அச்சங்கம் எச்சரித்துள்ளது.
2025ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவிலிருந்து 15 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு வருகை தந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 14.6 விழுக்காடு அதிகமாகும்.
இந்தியப் பயணிகளின் வருகை ஹோட்டல்கள் மட்டுமின்றி, சுற்றுலா நிறுவனங்கள், திருமண நிகழ்ச்சிகள், சமயச் சுற்றுலா மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் வருமானத்தை ஈட்டித் தருவதாக மலேசிய ஹோட்டல் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, விசா விலக்கை நீட்டிப்பதுடன், குடிநுழைவுச் சோதனைகளை வலுப்படுத்தி, முறைகேடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.








