ஜோகூர், தாமான் நூசா பெஸ்தாரி பகுதியில் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் தப்பிச் செல்லும்போது காரால் மோதியதில், குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக விளங்கிய 22 வயது இந்திய இளைஞர் உயிரிழந்தார்.
எஸ். தனுஸ் எனும் அந்த இளைஞர், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்த இச்சம்பவத்தில் படுகாயமடைந்து சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை 10 மணியளவில் உயிரிழந்தார்.
தாயார் பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருப்பதுடன், நான்கு சகோதர சகோதரிகளையும் பராமரித்து வந்த அவர், குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை ஏற்றிருந்ததாக உறவினர் டி. தச்சாயினன் தெரிவித்தார்.
சம்பவத்தின்போது கேபிள்களை வெட்டிக் கொண்டிருந்த கும்பலைக் கண்ட இளைஞர்கள், அதனைத் தங்களது கைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து வாகனங்களில் தப்ப முயன்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்ற தனுஸ் மீது காரை மோதியதுடன், மீண்டும் அவர் மீது சக்கரத்தை ஏற்றிவிட்டுத் தப்பியதாக உறவினர் தெரிவித்தார்.
தந்தையை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இழந்த அந்தக் குடும்பம், தற்போது மற்றோர் இழப்பையும் எதிர்கொண்டுள்ளது என்று டி. தச்சாயினன் தெரிவித்தார்.








