சிரம்பான், நவம்பர்.19-
16 வயது பள்ளி மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பதின்ம வயதுடைய இளைஞர் ஒருவர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து ஹென்றி கர்னி சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
19 வயதுக்கும் குறைவான அந்த இளைஞர், 21 வயது வரை சீர்திருத்தப்பள்ளியில் புனர்வாழ்வைப் பெற வேண்டும் என்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுரிதா புடின் இன்று உத்தரவிட்டார்.
ஹென்ரி கர்னி சீர்திருத்தப்பள்ளியில் தனது கல்வியைத் தொடர்வதற்கு அந்த இளைஞருக்கு நீதிமன்றம் வாய்ப்பு வழங்கியது. சமூக நல இலாகா சமர்ப்பித்த பரிந்துரைக்கு ஏற்ப அந்த மாணவர், எஸ்பிஎம் தேர்வில் அமர முடியும் என்பதுடன் கல்வியின் மூலம் எதிர்கால வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுமாறு அந்த இளைஞருக்கு நீதிபதி சுரிதா புடின் நல்லுரை வழங்கினார்.








