கோலாலம்பூர், பிப்ரவரி.21-
ஊழியர் சேமநிதி வாரியமான ஈபிஎஃப், 2025-ஆம் ஆண்டிற்கான லாப ஈவுத் தொகையாக 5.8 விழுக்காட்டிலிருந்து 6.3 விழுக்காடு வரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சந்தாதாரர்கள் தங்கள் ஓய்வுக் காலச் சேமிப்பைப் பயன்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மலேசிய பயனீட்டாளர் மற்றும் குடும்பப் பொருளாதாரச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான பேராசிரியர் Dr Nuradli Ridzwan Shah Mohd Dali கூறுகையில், லாப ஈவுத் தொகை அறிவிப்பு சேமிப்பை உயர்த்தினாலும், பண்டிகைக் காலச் செலவுகளுக்காகப் பணத்தை எடுப்பது குறிப்பாக இபிஎப்.பின் மூன்றாவது கணக்கைப் பயன்படுத்துவது நீண்ட கால நிதிப் பாதுகாப்பைப் பாதிக்கும் என எச்சரித்தார்
ஓய்வுக்காலத்திற்குப் பிறகு நிம்மதியான வாழ்வை உறுதிச் செய்ய, ஒரு சந்தாதாரரின் சேமிப்பு குறைந்தது 6 லட்சம் ரிங்கிட்டைத் தாண்டி இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். உலகளாவிய சந்தை நிலவரம் மற்றும் முறையான நிதி நிர்வாகத்தின் காரணமாக இந்த லாபத் ஈவுத் தொகை உயர்வு எதிர்பார்க்கப்பட்டாலும், அதனை அவசரச் செலவுகளுக்குப் பயன்படுத்தாமல் சேமிப்பதே எதிர்காலத்திற்கு நல்லது என Dr Nuradli Ridzwan மேலும் அறிவுறுத்தினார்.








