கோலாலம்பூர் என்பிஇ நெடுஞ்சாலை அருகிலுள்ள ஆலயத்தில் வழிபாட்டுச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இது குறித்து போலீஸ் துறை உடனடியாகவும் விரிவாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆலயத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக நிர்வாகத்தினர் ஏற்கனவே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ள நிலையில், சட்டப்பூர்வ நடைமுறைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமே இத்தகைய விவகாரங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.
சட்டமீறல் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி இன, சமயப் பதற்றத்தை ஏற்படுத்த யாரையும் அனுமதிக்கக்கூடாது என்றும் ரமணன் தெரிவித்தார்.
மேலும், போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் ஊகங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் டத்தோ ஸ்ரீ ரமணன் கேட்டுக் கொண்டார்.








