சுபாங் விமானப்படைத் தளத்தில் சுமார் 100 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், தனிப்பட்ட நிகழ்வா அல்லது பணியாளர்கள் மத்தியில் வேரூன்றிய கலாசாரமா என்பதைக் கண்டறிய தற்காப்பு அமைச்சு உள்விசாரணைக் குழுவை அமைக்கவுள்ளது.
போலீஸ் துறையின் விசாரணை முடிவடைந்ததும் இக்குழு அமைக்கப்படும் என்று தற்காப்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டிலுள்ள அனைத்து விமானப்படைத் தளங்களிலும் பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், பாதுகாப்பு நடைமுறைகளும் கடுமையாக்கப்படும் என்றார்.
இச்சம்பவத்தில் இராணுவ விமானங்கள் உள்ளிட்ட சொத்துகள் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியத்தையும் அவர் நிராகரிக்கவில்லை.
இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக ஐந்து விமானப்படை அதிகாரிகள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படாது என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.








