கிளந்தான், குவா மூசாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, கேமரன் மலைக்குச் செல்லும் FT185 ஜாலான் லோஜிங்-குவா மூசாங் சாலையின் நான்கு வழித்தடங்களில் இரண்டு மூடப்பட்டுள்ள போதிலும், வாகனப் போக்குவரத்து தொடர்ந்து நடைபெறுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால் சாலையின் இடதுபுற இரண்டு வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், மாற்றுப் பாதை மூலம் வாகனங்கள் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள விரைவில் நிதி ஒதுக்கீடு கோரப்படும் என கிளந்தான் பொதுப்பணித்துறை இயக்குநர் நிக் பட்லிஹிஷாம் நிக் இஸ்மாயில் தெரிவித்தார்.
மேலும், மாற்றுப் பாதையில் செல்லும்போது எச்சரிக்கைப் பலகைகளைப் பின்பற்றுவதுடன், வாகனமோட்டிகள் மெதுவாகவும் மிகுந்த எச்சரிக்கையுடனும் பயணிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நிலச்சரிவால் 20 மீட்டர் நீளமும் 30 மீட்டர் ஆழமும் கொண்ட பகுதி பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாலையில் 30 மீட்டர் தூரத்திற்குப் பிளவுகளும் கண்டறியப்பட்டுள்ளன.








