மலாக்கா, ஜாலான் தாமிங் சாரியில் இன்று அதிகாலை நிகழ்ந்த எட்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஆறு மோட்டார் சைக்கிளோட்டிகள் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 2.27 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் இரண்டு புரோட்டோன் வீரா ரக கார்கள் மற்றும் ஆறு மோட்டார் சைக்கிள்கள் சிக்கிக் கொண்டதாக மலாக்கா போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் முஹமட் ஸாகி ரமாட் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், ஒரு கார் தடம் மாறியபோது பின்னால் வந்த மற்றொரு கார் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார் எதிர்ப்புறச் சாலையில் புகுந்து ஆறு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதாகக் கூறப்பட்டது.
23 முதல் 29 வயதுக்குட்பட்ட ஆறு ஆண் மோட்டார் சைக்கிளோட்டிகளும் பலத்த காயங்களுடன் மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கார் ஓட்டுநர்கள் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். அவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.








