13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், சுகாதாரத் துறையை மேம்படுத்த நான்கு முக்கிய முன்னுரிமைகளை பொருளாதார அமைச்சு வகுத்துள்ளது.
அவற்றில் சுகாதார முதலீடு, நிதி நிலைத்தன்மை, மருத்துவத் தொழில்துறை வளர்ச்சி மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குதல் ஆகியவை முக்கிய இடம் பெறுவதாக பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசீர் அறிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான மலேசிய சிறுநீரகவியல் மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், தனியார் மருத்துவச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், மருத்துவக் காப்பீட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் மலேசிய அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் மருத்துவச் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் நோயாளிகளுக்குத் தேவையான முறையான சிகிச்சையைப் பாதிக்கக் கூடாது என்றும், இத்திட்டங்கள் அரசுத் துறை மருத்துவச் சேவைகளுக்குத் துணையாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மலேசியாவில் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நோயின் நிலை குறித்த தகவல்கள் கிடைத்தவர்களில் 63.3 விழுக்காட்டினர் மூன்றாவது அல்லது நான்காவது கட்டத்திலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மருத்துவச் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் காலம், சிகிச்சையின் முடிவுகள் மற்றும் நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் குறித்த தரவுகளைப் பகிர்ந்து, சுகாதாரக் கொள்கைகளை மேம்படுத்த மலேசிய சிறுநீரகவியல் சங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.








