கோலாலம்பூர், ஜாலான் துன் ராஸாக் பகுதியில் உள்ள டிரெக் (TREC) வளாகத்தின் முன்பாக, பட்டப்பகலில் கேபிள்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் கும்பலைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான 38 விநாடிகள் கொண்ட காணொளி இன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து இன்று காலை சுமார் 9.50 மணியளவில் திரேட்ஸ் தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி தொடர்பாகப் புகார் கிடைத்ததாக கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
பட்டப்பகலில் இரண்டு வாகனங்களில் வந்த சிலர், அந்த இடத்தில் கேபிள்களை வெட்டித் திருட முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது பொதுமக்கள் அவர்களை அணுகியதும், சந்தேக நபர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவித்த அவர், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.








