ஜோகூர், சுல்தானா அமீனா மருத்துவமனையின் இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் சரவணா குமார் கருப்பையா பதவி விலகியுள்ள நிலையிலும், அப்பிரிவின் மருத்துவச் சேவைகள் எதுவும் பாதிக்கப்படாது என்று அம்மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் நிஸாம் சுபாஹிர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், டாக்டர் சரவணா தொடர்ந்து இதய அறுவை சிகிச்சைப் பிரிவின் ஆலோசனை நிபுணராகப் பணியாற்றுவார் என்றும், மருத்துவமனையின் சிறப்புக் குழுவினர் வழக்கம் போல் தொடர்ந்து சேவைகளை வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், டாக்டர் சரவணா, ஜோகூர் மாநில இதய அறுவை சிகிச்சைப் பிரிவு சேவைத் தலைவர் மற்றும் தென் மண்டல இதய அறுவை சிகிச்சை சிறப்புப் பிரிவுத் தலைவர் ஆகிய பொறுப்புகளிலிருந்தும் ஒரே நேரத்தில் விலகியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இரண்டு மருத்துவமனைகளிலும் சேவைகளை வழங்க வேண்டியிருப்பதால், தனது பிரிவு ஊழியர்களுக்கு அதிக வேலைச்சுமை ஏற்பட்டதே தமது பதவி விலகலுக்கான காரணங்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகின்றது.








