பஹாங் மாநிலத்தில் உள்ள செந்நிற வால் கெளுத்தி மீன்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மாநில அரசு 4 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது.
பெக்கான், ஜெரான்துட், தெமர்லோ உள்ளிட்ட ஏழு இடங்களில் ஒரே நேரத்தில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகின்றது.
கோலா கிராவில் உள்ள டத்தாரான் பெக்கான் செஹாரி பகுதியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற மீன் பிடிக்கும் திருவிழா நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், இந்த மீன் வகைகள் மற்ற உள்ளூர் மீன் இனங்களை வேட்டையாடி அழிக்கும் ஆபத்தைக் கொண்டது என்பதால், அதன் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அதிகளவில் இந்த மீன்களைப் பிடிக்க ஊக்குவிக்கும் மீன்பிடிப் போட்டியும் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








