சீனாவைச் சேர்ந்த கிங்ஃபா, பிளாஸ்டெக் சீனா மற்றும் எதர்னெல் ஆசியா ஆகிய நிறுவனங்கள், மலேசியாவிலிருந்து சிறப்பு ரசாயனங்கள், பாலிமர்கள் மற்றும் பாமாயில் சார்ந்த பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன.
இதன் மூலம் மலேசிய நிறுவனங்கள் உலகளாவிய பெருநிறுவனங்களுக்குப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களாக வளரும் வாய்ப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக மலேசியா அனைத்துலக விநியோகச் சங்கிலியில் இடம்பிடிப்பதற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையமான மீடா தலைவர் தெங்கு ஶ்ரீ ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
ஷென்ஸென் நகரில் நடைபெற்ற மலேசியா–சீனா உயர்மட்ட வர்த்தக மற்றும் முதலீட்டு கலந்துரையாடலில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து பங்கேற்றதைத் தொடர்ந்து, ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் தனது சமூக ஊடகப் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், 2026-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மலேசியாவில் சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட முதலீடு 38.6 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு முதலீடுகளின் வெற்றியை முதலீட்டுத் தொகையை மட்டும் கொண்டு மதிப்பிடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில் மலேசியாவைச் சேர்ந்த எத்தனை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அனைத்துலக விநியோகச் சங்கிலியில் இணைந்துள்ளன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.








