பேராக் மாநிலம் கோலா கங்சார் பகுதியில் உள்ள உறைவிடப் பள்ளியில் 15 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சுயாதீனமான நீதி விசாரணை நடத்த வேண்டும் என மலேசிய சிறார் பாதுகாப்பு சங்கமான சிபிஎஸ்எம் வலியுறுத்தியுள்ளது.
அம்மாணவரின் மரணத்தில் வெளிப்புறச் சதி ஏதும் இல்லை என்று கூறப்பட்டாலும், பள்ளி நிர்வாகத்தின் கண்காணிப்பில் அலட்சியம் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக சிபிஎஸ்எம் தலைவர் டத்தோ ஶ்ரீ நஸிர் அரிஃப் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 16-ஆம் தேதி முதல் உடல்நலக் குறைவு காரணமாக பள்ளியின் மருத்துவ அறையில் தங்கியிருந்த அம்மாணவர், நவம்பர் 18-ஆம் தேதி காலை 10.35 மணியளவில் உயிரிழந்ததாக போலீஸ் அறிக்கை கூறுகின்றது.
ஆனால், பிற்பகல் 2.45 மணியளவில் மற்றொரு மாணவர் அவரைச் சுயநினைவின்றிக் கண்டறிந்த பின்னரே இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிய வந்ததாக நஸிர் அரிஃப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சுமார் நான்கு மணி நேரம் அம்மாணவர் கண்டறியப்படாமல் இருந்தது எப்படி என்றும், அவரை முறையாகக் கண்காணித்தார்களா? பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்றும் சிபிஎஸ்எம் சார்பில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.








