Nov 21, 2026
Thisaigal NewsYouTube

சிறார்கள் மத்தியில் அதிகரிக்கும் மனநலப் பாதிப்பு, இளவயது கர்ப்பம்: வான் அஸிஸா கவலை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிறார்கள் மத்தியில் அதிகரிக்கும் மனநலப் பாதிப்பு, இளவயது கர்ப்பம்: வான் அஸிஸா கவலை

நாட்டில் சிறார்கள் மற்றும் இளம் வயதினரிடையே மனநலப் பிரச்சினைகள், இளவயது கர்ப்பம், தற்கொலை மற்றும் பகடி வதை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மனைவி டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய உதவிகளை வழங்குவதுடன், குழந்தைகளைக் கண்காணிப்பதில் பெற்றோர்களும் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

2026 -ஆம் ஆண்டிற்கான தேசிய குழந்தைகள் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பாதிக்கப்படுவோர் உடனடி உதவி பெறுவதற்கு 24 மணி நேரமும் செயல்படும் தாலியான் காசே 15999 உதவி எண்ணைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தாலியான் காசே உதவி எண்ணுக்கு வரும் ஒவ்வொரு அழைப்பும் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதையும் வான் அஸிஸா சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேவேளையில், தேவைப்படும் பட்சத்தில், அழைப்பாளர்கள் போலீஸ் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், உதவி தேவைப்படுவோருக்கு விரைவான ஆதரவு கிடைக்க அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இளவயது கர்ப்பம் குறித்தும் கவலை தெரிவித்த வான் அஸிஸா, மலேசியாவில் 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை திருமணத்திற்கு வெளியே இளவயதில் கர்ப்பமடைந்த 21 ஆயிரத்து 114 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்பாராத கர்ப்பத்தை எதிர்கொள்ளும் இளம் தாய்மார்கள் மற்றும் அந்தச் சூழலில் பிறக்கும் குழந்தைகள் ஆகிய இரு தரப்பினரின் நலனையும் பாதுகாக்க, இந்தப் பிரச்சினைக்கு முறையான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வான் அஸிஸா வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →