இந்திய சமூகத்தினர், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தொழில்முனைவோர் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை, மலேசிய மடானி அரசாங்கம் பல்வேறு அமைச்சுகள், அரசாங்க நிறுவனங்கள் வாயிலாகத் தொடர்ந்து முன்னெடுக்கும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செந்தூலில் உள்ள எச்.ஜி.எச் மாநாட்டு மண்டபத்தில், கோலாலம்பூர் - சிலாங்கூர் இந்திய வர்த்தக, தொழில்துறை சம்மேளனமான KLSICCI ஏற்பாடு செய்த, 2026-ஆம் ஆண்டு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அந்த நடவடிக்கைகளில் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா முன்னெடுக்கும் பல்வேறு திட்டங்களும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு, குறிப்பாக பி40 - எம்40 பிரிவினருக்கு மானியங்கள், தொழில் தொடக்க மூலதனம் வழங்குவதற்காக மித்ரா மூலம் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் உயர்வு மடானி திட்டம் செயல்படுத்தப்படுவதையும் ரமணன் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனிடையே, மித்ரா - KLSICCI இடையிலான ஒத்துழைப்பின் கீழ், 2020, 2022ஆம் ஆண்டுகளில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான இரண்டு தொழில்முனைவோர் மேம்பாடு, உதவித் திட்டங்களைச் செயல்படுத்த 4 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி அங்கீகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 905 இந்திய சமூகத் தொழில்முனைவோர் இலக்காகக் கொள்ளப்பட்டதுடன், ஒவ்வொரு பயனாளிக்கும் அதிகபட்சமாக 5,000 ரிங்கிட் மதிப்பிலான வணிக உபகரண உதவிகள் வழங்கப்பட்டதாகவும் ரமணன் விவரித்துள்ளார்.








