நேபாளம் – திபெத் வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் பயண நோக்கம் தவறாகச் சித்தரிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினரின் காப்புறுதித் தொகை கோரிக்கைகள் பாதிக்கப்படலாம் என மலேசியா சோலிடரிடி ஃபேமிலிஸ் இன் ஹோப் அமைப்பு எச்சரித்துள்ளது.
மாயமானவர்களை மலை ஏறும் பயணங்கள் மற்றும் சாகசப் பயணங்களில் ஈடுபட்டவர்கள் எனக் குறிப்பிடுவது தவறானது என அதன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர். மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மாயமானவர்களில் 42 பேர் திபெத்தின் கயிலாச மலைக்கு ஆன்மிக யாத்திரை மேற்கொண்டவர்கள் என்றும், ஏனைய 12 பேர் நேபாளத்தின் இயற்கைக் காட்சிகளைக் காண ஜீப் வாகனத்தில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் என்றும் அவர் விளக்கினார்.
மலை ஏறுதல் போன்ற ஆபத்தான நடவடிக்கைகளுக்குக் காப்புறுதியில் தனிப்பட்ட நிபந்தனைகள் இருப்பதால், பயணத்தின் உண்மையான நோக்கத்தைத் துல்லியமாகக் குறிப்பிடுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், மாயமானவர்களின் சட்டப்பூர்வ நிலை மற்றும் குடும்பங்களின் உரிமைகள் குறித்து விளக்கமளிக்க வெளியுறவு அமைச்சுடன் நேரடிச் சந்திப்புக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.








