Sep 29, 2026
Thisaigal NewsYouTube
வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த பெர்கேசோ மூலம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோ ஶ்ரீ ரமணன்
தற்போதைய செய்திகள்

வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த பெர்கேசோ மூலம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோ ஶ்ரீ ரமணன்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.23-

நாடு முழுவதும் உள்ள பொது, தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பட்டதாரிகள், வேலை தேடுபவர்களின் வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்த 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை மனித வள அமைச்சு இன்று அறிவித்தது.

இந்த முன்முயற்சிகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ வழியாக நாடு முழுவதும் உள்ள 400 உயர்கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் என்று மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர் நு சென்ட்ரலில் (Nu Sentral) முதலாவது 'MyFutureJobs' தொழில் ஆய்வு மையத்தை (MYCEC) தொடங்கி வைத்துப் பேசிய அவர், "பல்கலைக்கழக மாணவர்களிடையே டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு MyFutureJobs ஒரு முக்கிய ஊன்றாகச் செயல்படும். இது தற்போதைய தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களின் திறன்களை வலுப்படுத்தும்," என்றார்.

மாணவர்களின் எதிர்காலத் தொழில் பாதையை தொலைநோக்கு ரீதியாகத் திட்டமிடவும் வழிகாட்டவும் உயர்கல்வி அமைச்சுடன் மனித வள அமைச்சு நெருக்கமாகப் பணியாற்றும் என்றும் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

"மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு தங்கள் எதிர்காலத்தைத் தேடத் தொடங்குவதை நாங்கள் விரும்பவில்லை. பட்டமளிப்பு விழாவன்று அனைவரும் மேடையில் பெருமிதத்துடன் சிரிக்கிறார்கள், ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு, அமைதியாகத் தங்கள் விவேகப்பேசியில் 'வீட்டிற்கு அருகிலுள்ள வேலைகள்' அல்லது '4,000 ரிங்கிட் சம்பளத்துடன் கூடிய வேலைகள்' என்று தேடுகிறார்கள்.

"கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மலேசியர்கள் தங்களின் உண்மையான தகுதிக்குக் கீழ் பணி புரிகின்றனர். இது நாட்டின் மனிதவளத் திறனை வீணடிக்கும் செயலாகும். சராசரியாக, மூன்று பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் ஒருவர் தனது கல்வித் தகுதிக்குத் தொடர்பில்லாத துறைகளில் பணியமர்த்தப்படுகிறார்கள்” என்றாரவர்.

சென்ட்ரலில் அமைந்துள்ள புதிய 'MYCEC' மையம் குறித்துப் பேசிய அவர், இது வேலை தேடுபவர்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்து, தொழில்துறை தேவைகளுடன் துல்லியமாகப் பொருத்த செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துகிறது என்றார்.

இந்நிகழ்வின் போது, MySiswa RHB டெபிட் கார்டு பயன்படுத்தும் 618,000 பயனர்கள் பயன் பெறும் வகையில் RHB வங்கிக்கும் MyFutureJobs போர்ட்டலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) அமைச்சரின் முன்னிலையில் கையெழுத்தானது.

மேலும், MyFutureJobs மூலம் 5,000 ரிங்கிட்டிற்கு மேல் சம்பளத்துடன் வேலை வாய்ப்புப் பெற்ற ஐந்து பேருக்குப் பணி நியமனக் கடிதங்களையும் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வழங்கினார்.

Related News