கோலாலம்பூர், ஆகஸ்ட்.06-
ரோந்துப் பணி சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவரைக் கத்தியால் குத்தி காயப்படுத்தியதுடன், சட்டவிரோதமாகத் தன் வசம் கத்தி வைத்திருந்ததாக நபர் ஒருவர், இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
56 வயது யாப் தை சுன் என்ற அந்த நபர், 35 வயது நஸ்ரி சுடிமான் என்ற போலீஸ்காரரை வயிற்றில் கத்தியால் குத்திக் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முதலாவது குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜுலை 31 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் கோலாலம்பூர், புடு, ஜாலான் யியூவில் உள்ள ஜாலான் புசிங்கான் யூவில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அந்த நபர் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. அவருக்கு ஜாமீன் அனுமதி மறுக்கப்பட்டது.








