ஈப்போ, அக்டோபர்.23-
பேராக் மாநிலம் கம்போங் சுங்கை பாப்பான் அருகே உள்ள சுங்கை பேராக் ஆற்று நீர், நீல நிறமாக மாறி வருவதற்கு அதில் கலக்கப்படும் மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் ஹஸ்புல்லா ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பச்சை நிறத்தில் இருக்க வேண்டிய நீர், நீல நிறமாக மாறுவதற்கு, அப்பகுதிகளில் சுரங்கத் தொழில்களில் இருந்து வரும் உலோகக் கலவைகள், சயனைடு மற்றும் ஆர்சனிக் போன்ற நச்சுப் பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீல நிறம் பார்ப்பதற்கு அழகாகத் தோன்றினாலும் கூட, அதிலுள்ள நச்சுத்தன்மை, மீன்கள் மற்றும் ஆற்றில் வாழும் பிற உயிரினங்களைக் கொல்லக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இந்த ஆற்று நீர் மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








