May 3, 2026
Thisaigal NewsYouTube
கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்
தற்போதைய செய்திகள்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

Share:

27 வயதுடைய கவின்ராஜ் என்ற இளைஞரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் இன்று காலை சுங்கைப்பட்டாணி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

18 வயதான தஸ்ராலேமன் மற்றும் 21 வயதுடைய வில்சன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு, மாஜிஸ்ட்ரேட் முகமது சைப் முன்னிலையில் வாசிக்கப்பட்டபோது, இருவரும் அதனை புரிந்துகொண்டதாகத் தெரிவித்தனர்.

குற்றப்பத்திரிகையின் படி, கடந்த மார்ச் 10 ஆம் தேதி அதிகாலை 12.30 மணி முதல் 1.30 மணி வரை, சுங்கைப்பட்டாணி தாமான் கெம்பாஸ் பிரிவு 2 பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக கவின்ராஜ் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கு மலேசிய குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது குறைந்தது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 12 பிரம்பு அடிகள் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வழக்கில், 18 வயதுடைய தஸ்ராலேமனின் மனைவியும் 22 வயதுடைய இன்னொரு இளைஞனும் வழக்குத் தரப்பின் சாட்சிகளாக மாற்றப்பட்டு, போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், அரசு தரப்பு வழக்கறிஞர் ருசானி, உடற்கூறு மற்றும் வேதியியல் அறிக்கைகள் இன்னும் பெறப்படாததால் வழக்கை ஒத்திவைக்க கோரினார்.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related News