கோலாலம்பூர், ஜனவரி.05-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேசத் துரோகக் கருத்துகளைக் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த, கிஜால் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரஸாலி இட்ரிஸுக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தமக்கு எதிரான தற்காப்பு வாதத்தில், அவர் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தத் தவறி விட்டதாகக் கூறி நீதிபதி நோர்மா இஸ்மாயில் இத்தீர்ப்பை வழங்கினார்.
ரஸாலி இட்ரிஸ் தனது அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
கிஜால் சட்டமன்ற உறுப்பினரும், திரங்கானு மாநிலச் ஆட்சிக்குழு உறுப்பினருமான ரஸாலி இட்ரிஸ், கடந்த 2023-ஆம் ஆண்டு, நவம்பர் 10-ஆம் தேதி, கெமாமான், பாடாங் அஸ்தாக்கா சுக்காயில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்த தேசத் துரோகக் கருத்துகளை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தனித்தனி நீதிமன்ற வழக்குகளில், இருவருக்கும் இடையிலான பாரபட்சமான நடத்தை குறித்து ரஸாலி இட்றிஸ் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








