கோலாலம்பூர், ஜனவரி.13-
சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் புதிய கடப்பிதழ் மற்றும் மைகாட் வடிவமைப்புகள் அதிகாரப்பூர்வமானவை அல்ல என்று உள்துறை அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
அந்தப் படங்கள் போலியானவை என்றும், உள் அமைச்சினால் அவை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கடப்பிதழ் மற்றும் மைகாட்டை இந்த ஆண்டு அமல்படுத்துவது குறித்த ஆரம்பக் கட்ட அறிவிப்பை உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியான் இஸ்மாயில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதியே வெளியிட்டிருந்தார். இருப்பினும், அவற்றின் அதிகாரப்பூர்வ வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இது தொடர்பான முறையான மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அமைச்சின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு ஊடகங்கள் வழியாக அவ்வப்போது வெளியிடப்படும். எனவே, பொதுமக்கள் இத்தகைய போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், சரியான தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்க்குமாறும் உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.








