பிலிப்பைன்ஸின் ரிசால் மாநிலத்தில் உள்ள பிலில்லா பகுதியில் நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், ஃபார்ம் ஃப்ரெஷ் (Farm Fresh Bhd) நிறுவனத்தின் பண்ணை இயக்குனர் ஜேக்கப் மதன் உயிரிழந்ததை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து ஃபார்ம் ஃப்ரெஷ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அதன் குழும நிர்வாக இயக்குனர் லோய் துவான் ஈ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மலேசியரான ஜேக்கப் மதன், பண்ணை அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிடச் சென்றபோது, ஹெலிகாப்டரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
35 வயதான ஜேக்கப் மதன், 13 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பல்கலைக்கழகப் பயிற்சியாளராக ஃபார்ம் ஃப்ரெஷ் நிறுவனத்தில் இணைந்தார். தனது கடின உழைப்பு மற்றும் பொறுப்புணர்வு காரணமாக மிகக் குறுகிய காலத்தில் அந்நிறுவனத்தின் உயர் பொறுப்புக்கு அவர் உயர்ந்தார் என்று லோய் துவான் ஈ புகழாரம் சூட்டினார்.








