“நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது”...
மரணத்திற்கு முந்தைய நாள், தன்னைப் பராமரித்த தாதிகளிடம் சித்தி ஹஸ்மா கூறிய இந்த வார்த்தைகள், இன்றும் அவர்களது நெஞ்சை விட்டு அகலவில்லை.
தம்மையும் தமது கணவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவையும் ஐந்து ஆண்டுகளாகக் கவனித்து வந்த மருத்துவக் குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்ததாக தலைமை தாதி கே. திவ்யா பாரதி தெரிவித்தார்.
“எங்களைக் கவனித்துக் கொண்டதற்கு நன்றி” என்று கூறிய சித்தி ஹஸ்மாவிடம், “அப்படிச் சொல்லாதீர்கள் துன்” என்று தாம் பதிலளித்ததாக திவ்யா கூறினார்.
அடுத்த நாள் காலையிலேயே அவர் உயிரிழப்பார் என்று தாம் ஒருபோதும் நினைக்கவில்லை என்றும், அந்த வார்த்தைகள் இன்னும் தமது மனதில் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதிச் சடங்கின்போதும், துன் மகாதீரின் கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, கால்களை மெதுவாகத் தடவி ஆறுதல் அளிப்பது என, அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தாதிகள் செய்தனர்.
“அவர்கள் இருவருக்கும் இடையிலான அன்பு எவ்வளவு ஆழமானது என்பதை எங்களால் உணர முடிந்தது. அந்தத் துயரத்தை சாதாரண வார்த்தைகளால் குறைத்துவிட விரும்பவில்லை. நாங்கள் அவருடன் இருக்கிறோம் என்பதை மட்டும் உணர்த்தினோம்” என்றார் திவ்யா.
100 வயதான சித்தி ஹஸ்மா, கடந்த திங்கட்கிழமை காலை 9.20 மணிக்கு தேசிய இருதயக் கழகத்தில் உயிரிழந்தார்.








