கோலாலம்பூர், ஜூன்.01-
அண்மையக் காலமாக மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் மாயமாவது, காயமடைவது, உயிரிழப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மலையேற்றத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மறுஆய்வு செய்யப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டுமென 'பாதுகாப்பான சமூகத்திற்கான கூட்டணி' என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டான் ஶ்ரீ லீ லாம் தை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்திய சம்பவங்கள் தொலைதூர, சவாலான நிலப்பரப்புகளில் வெளிப்புற நடவடிக்கைகளால் ஏற்படும் அபாயங்களை எடுத்துக் காட்டுவதாகவும், இனி அவர்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், காணாமல் போன மலையேற்ற வீரர்களைத் தேடுவதிலும், மீட்பதிலும், குடிமை பாதுகாப்புப் படை மற்றும் போலீசாரின் மனித வளங்கள் பெருமளவில் வீணாவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த மீட்பு நடவடிக்கைகள் பல நாட்கள் நீடிப்பதோடு, மீட்புக் குழுவினரும் அபாயங்களுக்கு உள்ளாவதாக டான் ஶ்ரீ லீ லாம் தை தெரிவித்துள்ளார்.








