கோலாலம்பூர், ஜூன்.01-
மலேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சமூக ஊடகப் பயனர்கள் தங்களது புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட தரவுகளைப் பாதுகாத்து மாற்றிக் கொள்ள, ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி MCMC அறிவித்துள்ளது.
இந்த 1 மாத கால அவகாசத்திற்குப் பின்னர், அவர்களது கணக்குகள் கட்டுப்படுத்தப்படலாம், இடைநிறுத்தப்படலாம் அல்லது பிற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் எம்சிஎம்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில், தற்போதுள்ள சமூக ஊடக பயனர்களின் வயதைச் சரிபார்க்க, சமூக ஊடகச் சேவை வழங்குநர்களுக்கு ஆறு மாத இடைக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், CPC விதிமுறைகளின் கீழ் உரிமம் பெற்ற சமூக ஊடக தளங்கள், குழந்தைகளின் பாதுகாப்பை மையமாகக் கொண்ட அம்சங்களை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்றும், வயதுக்கு ஏற்ற பாதுகாப்பு வசதிகளை உறுதிச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்று ஜூன் 1 -ஆம் தேதி முதல், உரிமம் பெற்ற சமூக ஊடகச் சேவை வழங்குநர்கள், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே, புதிய கணக்குகளைத் தொடங்கவும், அவர்களின் வயதுக்கு ஏற்ற அம்சங்களைப் பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்றும் எம்சிஎம்சி உத்தரவிட்டுள்ளது.








