கோலாலம்பூர், ஜூன்.01-
மலேசியாவில் சமூக ஊடகக் கணக்குகளின் பதிவு மற்றும் அதனைப் பயன்படுத்துவதில் புதிய வயது சரிபார்ப்பு விதிகள் இன்று ஜூன் 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன.
இந்த நடவடிக்கையானது, சிறார் பாதுகாப்பு குறியீடான CPC மற்றும் அபாயக் குறைப்பு குறியீடான RMC ஆகியவற்றின் அமலாக்கத்துடன் இணைந்து, புதிய இணைய பாதுகாப்பு சட்டம் 2025 -இன் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி MCMC நடைமுறைப்படுத்தவுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளின் படி, 16 வயதிற்குட்பட்டவர்கள் எந்தவொரு சமூக ஊடகக் கணக்கையும் தொடங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சமூக ஊடகக் கணக்கை உருவாக்க விரும்புவோர் மைகாட், கடப்பிதழ் அல்லது மைடிஜிட்டல் ஐடி MyDigital ID போன்ற அதிகாரப்பூர்வ அடையாள ஆவணங்களை வழங்கி வயது சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.
இந்த விதி புதிய கணக்குகளுக்கு மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள கணக்குகளுக்கும் பொருந்தும். ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது அடையாளத்தை மீண்டும் சரிபார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கையால், சமூக ஊடகங்களில் சிறார்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதுடன், தவறான பயன்பாடுகளைப் குறைப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








