கோலாலம்பூர், ஜூன்.01-
மலேசியாவில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய கட்டமைப்பிலான மைகாட் அடையாள அட்டையை அரசாங்கம் இம்மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டு, செப்டம்பர் 5-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய மைகாட்டை மாற்றும் வகையில், புதிய தலைமுறை மைகாட் கட்டம் கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மூலம் தேசிய அடையாள முறைமையை மேலும் வலுப்படுத்துவதே இந்த புதிய மைகாட்டின் நோக்கமாகும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்தெரிவித்துள்ளார்.
தற்போதைய மைகாட்டில் 23 பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய மைகாட்டில் 53 பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக தேசிய பதிவு இலாகாவின் தலைமை இயக்குநர் பாட்ருல் ஹிஷாம் அலியாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அதில் QR குறியீடு, ஹோலோகிராம், மைக்ரோ எழுத்துருக்கள், புற ஊதாக்கதிர் பாதுகாப்பு அம்சங்கள், லேசர் பொறித்தல் மற்றும் உயர் தர குறியாக்க வசதி கொண்ட சிப் உள்ளிட்ட பல நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய மைகாட் திட்டத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக, புத்ராஜெயாவில் உள்ள தேசிய பதிவிலாகா தலைமையகத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 18 அலுவலகங்களிலும் முன்பதிவு முறையின் மூலம் புதிய மைகாட் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், இந்தச் சேவையானது நாடு முழுவதும் கட்டம் கட்டமாக விரிவுபடுத்தப்படும் என்றும் தேசிய பதிவு இலாகா அறிவித்துள்ளது.








