நீலாய், ஜூலை.16-
11 வயது சிறுவனைத் தாக்கியதுடன், அந்தச் சிறுவனைக் கொன்று விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படும் 30 வயது மதிக்கத்தக்க மாது ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையை வைத்திருக்கும் அந்த மாது, நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணியளவில் நெகிரி செம்பிலான், மந்தின், ஶ்ரீ பல்மா வில்லா வீடமைப்புப் பகுதியில் ஒரு மளிகைக் கடையில் சிறுவனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்தச் சிறுவனின் தாயார், நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் போலீசில் புகார் செய்துள்ளார் என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹசிம் தெரிவித்தார்.
கடையில் குளிர்பானம் வாங்கிக் கொண்டு இருந்த அந்தச் சிறுவனை, சம்பந்தப்பட்ட மாது எட்டி உதைத்துச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த மாதுவின் செயல், அந்த மளிகைக் கடையில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவாகியிருப்பதாக அப்துல் மாலிக் குறிப்பிட்டார்.
கை, கால்கள் மற்றும் முகம் வீங்கிய நிலையில் அந்தச் சிறுவன் சிரம்பான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.








