கோலாலம்பூர், டிசம்பர்.05-
கடந்த நவம்பர் மாதம், மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சட்டத்திற்குப் புறம்பான வகையில் நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் கட்டாயமாக தண்டிக்கப்படுவார்கள் என இலக்கவியல் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
இது போன்ற அசம்பாவிதங்கள் போலீசாரால் ஏற்பட்டாலோ அல்லது போலீஸ் தடுப்புக் காவலில் ஏற்பட்டாலோ அதனை விசாரணை செய்ய குற்றவியல் சட்டத்தில் இடமுண்டு என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார் .
சட்டம் மற்றும் நீதியின் மீது மக்களின் நம்பிக்கை நிலைக்க வேண்டுமானால், அதிகாரிகளின் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம் என்றும் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வே போலீஸ் நிலையத்தில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மணிசேகரன் மோகன் என்ற 41 வயது லோரி ஓட்டுநர், சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்த சம்பவத்தில், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்றும் கோபிந்த் சிங் கேள்வி எழுப்பினார்.
தடுப்புக் காவல் மரணங்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 334-ன் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட கோபிந்த் சிங், இது குறித்து சட்டத்துறை அலுவலகம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற சம்பவங்களில், புலன்விசாரணை வெளிப்படைத்தன்மையோடும், துல்லியமாகவும் செயல்படுவதை அதிகாரிகள் உறுதிச் செய்ய வேண்டும் என்றும் அவர் கருத்துரைத்துள்ளார்.








