கோலாலம்பூர், ஜூலை.18-
நாட்டின் புதியத் தலைமை நீதிபதியாக அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சால்லே நியமிக்கப்பட்டுள்ளார். வான் அஹ்மாட் ஃபாரிட் நியமனத்திற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
கூட்டரசு அரசிலமைப்புச் சட்டம் 122B பிரிவின் கீழ் பிரதமரின் பரிந்துரையின் பேரில் ஆட்சியாளர்கள் மாநாட்டில் கலந்தாலோசிக்கப்பட்டு, தலைமை நீதிபதியாக வான் அஹ்மாட் ஃபாரிட் நியமனத்திற்கு மாமன்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
நேற்றிரவு கூட்டரசு நீதிமன்ற தலைமை பதிவதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ அபு பாக்கார் ஜாயிஸ், அப்பீல் நீதிமன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு கூட்டரசு நீதிமன்ற நீதிபதியான டத்தோ அஸிஸா நவாவி, சபா, சரவாக் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூவரும் வரும் ஜுலை 28 ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் மாமன்னர் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வர்.
தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வான் அஹ்மாட் ஃபாரிட், கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி முதல் அப்பீல் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்துள்ளார்.
62 வயதான வான் அஹ்மாட் ஃபாரிட், கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி முதல் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி வரை உள்துறை துணை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஆவார்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கோல திரங்கானு சட்டமன்றத் தேர்தலில் வான் அஹ்மாட் ஃபாரிட் தோல்விக் கண்டார்.
எஸ்பிஆர்எம் தடுப்புக் காவலில் மரணம் அடைந்த தியோ பெங் ஹோக்கின் மரணம் தொடர்பில் அவரின் பெற்றோர், போலீஸ் துறைக்கு எதிராகத் தொடுத்த வழக்கு, முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் ஸைனுடின், ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர் எம்மிற்கு எதிராக சவால் விட்ட வழக்கு முதலியவற்றைப் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வான் அஹ்மாட் ஃபாரிட், ஏற்கனவே கையாண்டுள்ளார்.








